Monday, July 4, 2011

விழி மொழி!

தமிழை விடவும் அழகியதொரு மொழி 
இருக்குமென்று எண்ணியதில்லை 
உன் விழி மொழி வாசிக்கும் வரை!
அதெப்படி உன்னால் மட்டும் முடிகிறது
பார்வையிலேயே கொஞ்சுகிறாய், குழைகிறாய் 
சிரிக்கிறாய், கண்டிக்கிறாய்!
சிறு பார்வையாலே
நீ என்னைக் கிள்ளவும் செய்கிறாய்!
கொல்லவும் செய்கிறாய்!

புருவங்களை உயர்த்தி இறக்கி 
கைகள் ஆட்டி நீ பேசுகையில் 
சிந்துவது என்னவோ கவிதை தான் 
ஆனால் நான் தான் 
செத்து செத்து பிழைக்கிறேன்!

குலுங்கி நீ சிரிக்கையில்
விழும் கண்ணக் குழி அழகில்
தடுக்கி விழுந்து
முழித்துக் கொண்டிருப்பேன் நான்!
என்னாச்சு இவனுக்கு என்று
வெள்ளந்தியாய் பார்ப்பாய் நீ!

அது வேண்டும் என்று கைகாட்டி,
அடம் பிடித்து
உணர்த்துகிறாய்
குழந்தை நீ எனக்கு என்று!

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது 
இப்படி செல்லம் கொடுக்க
அதிகமாய் தான் செல்லம் கொடுக்கிறாய் நீ 
கொடுக்கையில் குழந்தையாக்குகிறாய் 
பெறுகையில் குழந்தையாகிறாய்!

இப்பொழுதெல்லாம் புரிகிறதோ இல்லையோ
உன் பார்வைகளுக்கு கட்டுப் படுகிறேன்
கேண்டீனில்,  ஒரு மாலை பொழுதில்,
ஏதோ பேச நான் எத்தனித்த போது
போதும் நிறுத்து என்பதாய்
கை உயர்த்தி முறைக்கிறாய்
உயர்த்திய கையில் 
அப்படியே விரல் மடித்து
அண்ணா ரெண்டு டீ ஒண்ணு ஸ்ட்ராங்கா 
என்று எனக்கும் சேர்த்து சொல்லிவிட்டு
மீண்டும் முறைக்கிறாய்!
மீண்டும் நான் பேச வாயெடுத்தால்
பாஸு டீ இன்னும் வரலை
என்று நகையாடுகிறாய் 
புரியாமல் சிரிக்கிறேன் நானும்!

இப்படியே, இப்பொழுதே
விழிகளில்
உன் விழிகளில்
என் உலகம் உறைந்திட வேண்டும்!


- அருண்

2 comments:

  1. So you too started writing these kind of poems! but your other poems about tamil and Madurai are too good. try some more like that kind. your language is good.

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் என் நன்றிகள். உண்மையில் நான் இந்த வலைப் பூவினை கவி எழுத நிறுவவில்லை. பல தளங்களிலுமான என் எண்ணங்களையும், கோபங்களையும் கட்டுரைகளாய் வெளிப்படுத்தவே நிறுவினேன். நேரமின்மை மற்றும் சோம்பல் காரணமாய் முடியவில்லை. வருடம் ஒன்று கழிந்து சமீபமாய் தான் மீண்டும் எழுதுகிறேன். தங்களின் ஆதரவை விமர்சனங்களாய் வெளிப்படுத்தவும்.

    ReplyDelete