Sunday, June 5, 2011

மாநகராம் மதுரைக்கு மைந்தன் எழுதிக் கொள்வது!

நான்கு வயதில் உன்னை விட்டு பிரிந்து சென்றவன், என் 18 வயது வரை மேற்கு தொடர்ச்சி மலையின் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் உன் பெருமைகளை கேட்டு வளர்ந்தேன். மாறி மாறி 7  பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்தவன் மீண்டும் கல்லூரி படிப்பிற்காக உன்னிடம் வந்தேன்.
 

புலம் பெயர்ந்த  நான்
என் வேர் தேடி வந்தேன்...
பாசத்தை காட்டினாய்,
பச்சை துரோகங்களையும் காட்டினாய்!

யாதவர் கல்லூரி நூலககத்தின்
சூழல் கற்று தந்த சாந்தமும்...
சோகமானாலும், கோபமானாலும்
பேனா தூக்கியதும்-என
வன்மத்தின் விளக்கமாய் கற்பிக்கப்படும் உன்னிடம்
நான் பெற்ற நல்லவைகள்,
காலம் போனாலும் மாறாத சுவடுகள்!
ஐந்து அரியர்கள் வைத்ததும்,
ஆறாவது அறிவை கூர்மையாக்கியதும்,
ஞாயிறு கூட நூலகம் சென்று படித்
ததும்,
செமஸ்டர் தேர்வை கட் அடித்து-
கில்லி படம் பார்த்து திரிந்ததும்,
உன்னிடத்தில்தான் எல்லா சுதந்திரமும்!

எனக்கு பெரியாரை அறிமுகப்படித்தியதும் நீ ...
சாதி வன்மையைக் காட்டிக் கொடுத்ததும் நீ ...
திராவிடத்தின் முற்போக்கு தெரிவித்தும் நீ ...
அந்நியர்கள் வந்த சுவடுகளை காட்டியதும் நீ...
மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் அவசியம் உணர்த்தியதும் நீ...

உலகமயமாக்கலின் தாக்கத்தால்-
ஓடிக் கொண்டிருந்ததும் இங்கு தான்!
ராயல் கோர்ட்டில் உண்டு களித்ததும் இங்கு தான்!
நள்ளிரவில் போஸ்டர் ஒட்டித் திரிந்ததும் இங்கு தான்!
  
நீ வெறும் ஊரல்ல எனக்கு,
நாடோடியாய மட்டும் வந்து போக-
நீ வேண்டாம் எனக்கு!
தமிழ் சங்கம் வளர்த்த உன்னை-
பிரியும் வலி,
விவரிக்க வார்த்தைகளற்ற பலி!
அது சொல்லியும் மாளாது இனி...
நீ வெறும் ஊரல்ல எனக்கு! 

வேலை தேடும் பலருக்கும்
பல தேவைகள்
பல காரணங்கள் 
பலருக்கு பிழைத்திருக்க வேண்டும்,
சிலருக்கு செழித்திருக்க வேண்டும் 
எனக்கோ உன்னில் இருக்க வேண்டும்!

உன்னில் வசிக்கும் பலர் 
வேலைக்காக 
காதலிக்காக 
அந்தஸ்த்துக்காக 
அலாரமாக செல்வதற்காக 
வண்டி வாங்குகிறார்கள், நானோ 
உன்னைச் சுற்றி திரியவே,
ஆசையாய் வாங்கினேன்
என் முதல் யமஹா!

நான் மதுரக்காரன்!
எனக்கு நாக்கும் ஒன்னு 
வாக்கும் ஓன்னு
என அடிக்கடி
பெருமையாய் கூறுவதுண்டு!

ஆனால்
இன்று கொடுத்த வாக்கை மறந்து, 
உன்னை விட்டு பிரிந்து போகும்
என்னை
வேஷக்காரன் இவன்
என்று மட்டும் ஏசிடாதே!


உன்னை பிரிந்து செல்வது
அத்தனை எளிதல்ல எனக்கு!
கோனார் கடை, அம்மா மெஸ் - ருசித்து சாப்பிட,
மரண விலாஸ், பொன்னையா மெஸ் - தினமும் சாப்பிட,
செட் புரோட்டா,
நள்ளிரவு தேநீர்,
நடு நிசி வீதி உலா,
டாப் அடிக்க தமிழ்ச் சங்கம் வீதி, செல்லூர் கண்மாய்,
என அனைத்தையும் விட்டு செல்கிறேன்!

நான் ஆண்பிள்ளை என்பதை-
அடிக்கடி நினைவுபடுத்தும்!
ஒன்பது மகளிர் கல்லூரிகள்,
கோவில் வீதி தாவணிகள்,

தினம் காலையில்
என் தேநீர் வேளையில்
சாலை கடக்கும் அவள்
கல்லூரி காலத்தில் பார்த்த அதே அவள்
இப்போது புதிதாய், அழகாய் புடவையில்
என அனைத்தையும் விட்டு செல்கிறேன்!

மாதம் பிறக்கும் முன்னே
வங்கி கணக்கில் ரூ. 25000/- 
வாரம் இரண்டு இரவு சினிமா 
இரண்டு இரவு நகர் வலம்
எஞ்சிய இரவு நிலா தூக்கம் 
ஞாயிறு அன்று அம்மாவின் ஸ்பரிசம் 
சாம்பார் சாதம் 
தங்கையுடன் சண்டை
என அனைத்தையும் விட்டு செல்கிறேன்!

என் பாட்டன் முப்பாட்டன்-
வாழையடி வாழையாய் வழிபட்ட 
கருப்பணசாமி,
கட்டி அனைத்த தோழர்கள்,
கசப்பை உமிழ்ந்த கனவான்கள்,
உயிர் கொடுக்கும் நட்பு,
எனக்காக கண்ணீர் சிந்த 
என்னைக்  கொண்டாட 
எனக்கென்று ஒரு கூட்டம்,
என் ஆசை யமஹா,
என் சொந்த நிறுவனக் கனவு,
என அனைத்தையும் விட்டு செல்கிறேன்!


நான்...
நம்பியவர் மாரில் பாய்ந்த கிடா
என் கனவுகளுக்கும்
கள்ளிப் பால் ஊற்றிவிட்டு செல்கிறேன்
கலங்கியபடி!

கட்டிய கண்ணீரைக் கூட
சிந்த முடியாமல் நான் 
ஆண்பிள்ளை அழக் கூடாது
அதையும் கற்றுக் கொடுத்திருக்கிறாய் நீ...

செல்லவும் மனமில்லாமல் 
தங்கவும் மனமில்லாமல் 
செல்கிறேன் உன் பிள்ளை 
கனத்த இதயத்தோடு 
வேஷக்காரன் இவன் 
என்று மட்டும் ஏசிடாதே !
சென்று வருகிறேன் 
என் மாநகரே 
நான் சென்று வருகிறேன்...