Friday, July 15, 2011

தங்கை இவள்

சின்னஞ் சிறு வயது முதல்
நான் அறிந்த தேவதை இவள்!
என்னோடே வளர்ந்து வந்த
சித்திரம் இவள்!
தங்கை இவள்
எனக்கென்று பதறுகையில்
தாயும் இவள்!
அப்பாவிடம் சொல்லி
என் திருட்டு உணர்த்திய
இவள் தானே
பிறிதொரு நாளில்
மாடு முட்ட வர
என் பின்னால் ஒளிந்து
நான் ஆளானதையும் உணர்த்தியவள்!
முழித்து விடுவாளோ என்றே 
மூச்சடக்கி பார்த்திருந்தது எத்தனை காலம்.
ஆக்கி தின்னக் கூட்டாஞ்சோறு -
இன்று நினைத்தாலும்
சிறுபிள்ளைத்தனமாய் தோன்றவில்லை.
இவள்  தத்தி தத்தி தமிழ் பேசிய
நடை பழகிய நாட்கள்
என் நினைவில்.
நெஞ்செல்லாம்
இவள் அள்ளித் தந்த புன்னகையே

Saturday, July 9, 2011

காதல்

 தந்தை பெரியாரின் பார்வையில் காதல் பற்றிய கருத்தை இவ்வாறு கொள்ளலாம்

ஆசையை விட                                                         
அன்பை விட
காதல் என்பதாய் எதுவும் இல்லை.

கலப்பு திருமணத்தை ஊக்குவித்து வளர்த்த வெண்தாடி வேந்தர் காதலை இவ்வாறு விளம்பியது காதலையும் சந்தைபடுத்தி  அசுரத்தனமாய் வளரும் முதலாளித்துவத்தை மனதில் கொண்டே என்பது என் எண்ணம்.

நட்பில் ஆசைகள் வருவதில்லை
ஆசையாய் நட்பும் வருவதில்லை
ஆனால் காதல் அப்படி அல்லவே
ஆசையாய் காதலும்
காதலினால் ஆசையும்
வந்தால் மட்டுமே அது காதல்!

ஆசை ஆசையாய் ஒரு நட்பு!
அற்புதமானதொரு நட்பில்
அற்பமாய் ஓர் ஆசை!
அவ்வளவே காதல்

எங்க வைகை

முன்பொரு நாள் முக்கொம்பு (திருச்சி) சென்று இருந்தேன். இரு கரை தொட்டு செல்லும் காவிரியின் பிரம்மாண்டம் எனக்கு பிரமிப்பூட்டியது. அத்தனை வேகம் இருந்தும் சாந்தமாய் செல்லும் காவிரி என்னை வெகுவாய் ஆச்சர்யபடுதினால். நான் விவரம் அறிந்த வயதில் இருந்தே இரு கரை தொட்டு சாந்தமாய் செல்லும் வைகையை பார்த்ததில்லை. எப்போதாவது எங்கள் வைகையும் இரு கரை தொட்டு செல்வாள்... ஆனால் அப்போதெல்லாம்...

வைகையிலே 
எங்க வைகையிலே
கரை தொட்டிட்டாலும்
நுரை பொங்கிட்டாலும்
வந்திடுமே
வெள்ளம் வந்திடுமே
வீதி வீடெல்லாம் புகுந்திடுமே
செய்கூலி இல்லாம சேதாரம் தந்திடுமே
காவும் வாங்கிடுமே
கண்ணீரு வத்தமுன்னே
கண்ணீரு வத்த முன்னே
வைகையும் வத்திடுமே
கரையும் காஞ்சிடுமே
மைதானம் ஆகிடுமே

தாயின் மார் வற்றினாலும்
அழும் குழந்தை
அவள் கதகதப்பில் தான் அடங்கும்!
அப்படியே
அப்படியே நானும்
எங்கள் வைகையிடம்.

நட்பாகவே விழைகிறேன்

எட்டுத் திக்கும்
முட்டித் திரும்பி
செல்லும் திசை அறியாது இருந்தேன்
எங்கிருந்தோ வந்த நீ
கைகாட்டி மரமாய் நின்றாய்
ஒன்பதாவது திசையாய்
விண்ணை காட்டினாய்
இதோ
விண்ணை முட்ட எத்தனிக்கிறேன்
வென்றால் நட்சத்திரமாவேனோ?
வீழ்ந்தால் விதையாவேனோ? அறியேன்
எதுவானாலும்
உன் நட்பாகவே விழைகிறேன்!

புகைப்படம்: அருண் நாதன்  இடம்: பாம்பன், ராமேஸ்வரம் 

தயக்கம்

அனுப்பிச்ச ரூவா கிடைச்சிடுச்சா பா?
………..
அங்க ரொம்ப குளிராமே?
இன்னொரு போர்வை வாங்கிக்கய்யா
என்ற தாயிடம்
எப்படிச் சொல்வேன்?
விடுதிக் கட்டணத்திற்கே
இன்னும் நூறு ரூவா தேவை என்று!

Wednesday, July 6, 2011

நீ + நான்


எனக்கான உன் அக்கறையை விட
உனக்கான என் அக்கறையை விட
நட்பென்பதாய் வேறொன்றும் இல்லை!

உலகம் நம்மை
நண்பர்களாய் கண்டு கொண்டிருக்க
நீ என்னையும்
நான் உன்னையும்
அவர் அவருக்கான பிம்பமாகவே காண்கிறோம்!

கண் முன்னே விரிங்கின்றன நம் கல்லூரி நாட்கள்....
என் நிழலாய் நீயும் 
உன் நிழலாய் நானும்
வாழ்ந்த நாட்கள்

என் இலக்கிற்கான பாதையில்
நான் உன்னையும்
உன் இலக்கிற்கான பாதையில்
நீ என்னையும்
கண்ட போது தான்
நம் நட்பு நெருக்கமானது

என் பிறந்த நாளுக்கு நீயும்
உன் பிறந்த நாளுக்கு நானும்
அளித்துக் கொண்ட பரிசுகள்!

இரட்டைக்  குழல் துப்பாக்கி
இவர்கள்!
எனப் பெயரெடுத்தது

உன் கைக்குட்டை
மட்டுமே அறிந்த
என் கண்ணீர் துளிகள்!

வார்த்தைகள்
உடைக்க முற்படாத போது
மௌனங்களில் கரைந்த துக்கங்கள்!

என் கண்கள் லேசாய் கலங்குகின்றன...
காலம் நம்மை தள்ளி வைத்தாலும்
தனியே நடை பழகிக்
கற்றுக் கொண்டாலும்
காத்திருப்போம்
எதிர் பார்த்திருப்போம்

வாரிசுகள் நாங்கள்!

ஆதித் தமிழை புறந் தள்ளி 
அன்னியர் நுழைந்து
சமணம் அழித்து, ஆதாரம் சிதைத்தே
தமிழன்னையின் 
வீணை முறித்து எறிந்த போது
பகை முறித்து - வீணை செய்தே
கை நரம்பு அறுத்து
வீணைக்கு நரம்பாய் முறுக்கேற்றியே 
அன்னைக்கு  கொடுத்து - மொழி காத்திட்ட
தமிழ் சாதியின் வாரிசுகளடா நாங்கள்!

வாழ்ந்து கொண்டிருப்பது நாங்கள்
மெல்லச் சாகுமோ தமிழ் இனி?
வீழ்ந்திடுவோமோ நாங்கள்?

மூச்சு உள்ள வரை
தமிழ் சுவாசிப்போம் நாங்கள்
காற்றில் கரைந்தாலும்
தமிழுக்கே சுவாசம் ஆவோம் நாங்கள்

மெல்லச் சாகுமோ தமிழ் இனி?